ஆன்மிகம்

குழந்தை பாக்கியம் அருளும் நாகை நவநீத கிருஷ்ணர்! இத்தலத்தின் சிறப்புகள் என்ன?

நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் அருள்பாலிக்கும் நவநீத கிருஷ்ணரின் சிறப்புகள், வழிபாட்டு முறைகள் மற்றும் குழந்தை பாக்கியம் குறித்த நம்பிக்கைகள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

குழந்தை பாக்கியம் அருளும் நாகை நவநீத கிருஷ்ணர்! இத்தலத்தின் சிறப்புகள் என்ன?
கிருஷ்ணனின் குழந்தைப் பருவம்!" மிகக் குறும்பானது. குறிப்பாக வெண்ணெயைத் திருடித் தின்பது என்றால் அவனுக்கு விசேஷ பிரியம். அதனால்தான், நந்தகுமாரா என்று அழைப்பதுபோலவே நவநீத சோரா என்று அழைத்தாலும் ஆனந்தப்படுபவன்.

நவநீதம் என்றால் வெண்ணெய். சோர் என்றால் திருடன். நவநீத சோரன் என்று வடநாட்டில் கிருஷ்ணரைச் செல்லமாக அழைத்தாலும் நாம் இங்கே அவனை நவநீதக் கண்ணனாகவே கொண்டாடி மகிழ்கிறோம்.

காரணம், வெண்ணெயைத் திருடினாலும் அவன் விஷமங்கள் பிறரைப் புண்படுத்தாதவை. யோசித்தால் சிரிக்க வைப்பவை. ஆன்மிக ரீதியாக சிந்திக்கவும் வைப்பவை. அதோடு, அவனது அத்தகைய லீலைகளால் கோகுலமே மகிழ்ந்தது, கொண்டாடியது.

அதனால்தான் எல்லாருமே தங்களுக்கு கிருஷ்ணன் போன்ற குறும்புக்காரன், புன்னகை மன்னன் மகனாகப் பிறக்க வேண்டும் என்று விரும்பினார்கள், இன்றும் விரும்புகிறார்கள். அத்தகையோர், பகவான், நவநீத கிருஷ்ணனாக அருளும் தலங்களில் வேண்டினால் மழலைப்பேறு நிச்சயம் கிட்டும் என்பது நம்பிக்கை. நவநீத கிருஷ்ணனுக்கு தென் இந்தியாவில் பல இடங்களில் கோயில்கள் உள்ளன.

அவற்றுள் மிகவும் உயர்வாகப் போற்றப்படுவது, கர்நாடகத்தில் உள்ள தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் கோயில் தான். இத்திருத்தலத்தில் தவழும் குழந்தையாகக் காட்சி தருகிறார். கிழக்கு பார்த்தபடி கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு 

சுருட்டைதலைமுடி, கழுத்தில் முத்து மாலையுடன் காட்சி தருவது அழகோ அழகு. இவரைப் பார்த்து மனதார வேண்டினால் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்று அனுபவபூர்வமாகச் சொல்லும் பக்தர்கள் ஏராளம். குழந்தை பாக்கியம் அருளப் பெற்றவர்கள், நேர்த்திக்கடனாக அந்த நவநீத கிருஷ்ணனுக்கு வெண்ணெய் சாத்தி அர்ச்சனை செய்கிறார்கள்.


அவ்வளவுதூரம் சென்று அவரை தரிசிக்க முடியாதவர்களின் வசதிக்காகவே எம்பெருமான் நவநீத கிருஷ்ணனாக எழுந்தருளியுள்ள தலங்களுள் ஒன்று, நாகை இதோ, அந்தக் கோயிலுக்குச் செல்வோமா? 108 திவ்ய தேசத் தலங்களுள் ஒன்றான,நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயிலின் தெற்கு மாடவளாகத்தில் அமைந்துள்ளது, நவநீதகிருஷ்ணர் கோயில் முன் கோபுரம் கிடையாது. பிரமாண்ட உயர்ந்த வாசலுக்கு மேலே மூன்று மாடங்கள். நடுவே உள்ள மாடத்தில் காளிங்கனின் படத்தின் மீது நாட்டியமாடும் கிருஷ்ணன் இருக்க, வல, இட மாடங்களில் ருக்மணி, சத்யபாமா உள்ளனர்.


உள்ளே சென்றால், துவ ஜஸ்தம்பம். பணிந்து, கருடனை வணங்கிச் சென்றால், நேராக கர்ப்பகிரகம். உள்ளே ஸ்ரீகிருஷ்ணன் கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நடனமாடும் திருக்கோலத்தில், நவநீத கிருஷ்ணனாக எழில்கொஞ்சக் காட்சி தருகிறார். ஸ்ரீருக்மணி, ஸ்ரீசத்தியபாமா தனிச் சன்னதி கொண்டுள்ளனர்.


விமானங்கள் சோழர்கால கட்டடக் கலை பாணியில் எழிலான சுதைச் சிற்பங்களுடன் அமைந்துள்ளன. பிராகாரச் சுவர்களில் பால கிருஷ்ணனின் லீலைகள் ஓவியங்களாகவும், புடைப்புச்சிற்பங்களாகவும் காணப்படுகின்றன. ஆஞ்சநேயர், விநாயகர் கருடாழ்வார், சுற்றுப் பாதையில் மணவாளமுனிவர் ஆகியோரும் உள்ளனர்.


இங்கு நவநீத கிருஷ்ணனுடன், ஆலிலையில் சயனித்துள்ள பாலகிருஷ்ணரும் உள்ளார். இத்தலத்துக் கிருஷ்ணன் வித்தியாசமானவர் என்கிறர்கள். இவரை வணங்குவோரின் கனவில் தோன்றி அவர்களுக்கு அருள்பாலிப்பதுடன், அவர்களிடம் தனக்கு இது வேண்டும், அது வேண்டும் எனக் கேட்டுப் பெறவும் செய்வாராம்.
பெங்களூரில் வசிக்கும் பக்தர் ஒரு வரிடம் இந்தக் கிருஷ்ணன் கனவில் சென்று கேட்டதையடுத்து, அந்தி பக்தர் இப்போதும் வருடா வருடம் இங்கே வந்து பவித்ரோற்சவம் நடத்திவைப்பதாகச் சொல்கிறார்கள்.


புத்திர பாக்கியம் வேண்டி தரிசனம் செய்ய வருபவர்கள்; ஸ்நானம் செய்து விட்டு ஈரத்துணியுடன் வந்து தங்கள் கைகளில் ஆலிலை கிருஷ்ணனை ஏந்திக் கொள்கிறார்கள். பிறகு மடியில் அமர்த்தி குழந்தையாக பாவித்துத் தாலாட்டச் சொல்கிறார், கோயில் பட்டர். அப்போது பாடுவதான பாவனையாக, பட்டர் பால முகுந்தாஷ்டகம் எட்டு ஸ்லோகங்கள் சொல்லி கிருஷ்ணரிடம் அவர்களுக்காக வேண்டுதல் செய்வார். இப்படி பூஜை செய்ததன் பலனாக, அடுத்த ஆண்டுக்குள் அவர்களுக்குக் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.


லண்டனில் பணிபுரியும் பக்தர் ஒருவர் தமது இத்தகைய வேண்டுதல் நிறைவேறியதற்கு நன்றிக்கடனாக, கிருஷ்ணருக்கு வெள்ளிக் கவசம் வாங்கித் தந்துள்ளதாகக் கூறுகின்றனர். கர்ப்பக்கிரக மண்டபத்திலேயே பன்னிரு ஆழ்வார்களின் திருவுருவங்களும் உள்ளன. உற்சவர், பாமா ருக்மணியுடன் மிக அழகாக இருக்கிறார். ராமானுஜர் வகுத்த பாஞ்ச ராத்திர முறைப்படி பூஜைகள் நடக்கின்றன.மண்டபத்திலேயே பன்னிரு கர்ப்பக்கிரக ஆழ்வார்களின் திருவுருவங்களும் உள்ளன. உற்சவர், பாமா ருக்மணியுடன் மிக அழகாக இருக்கிறார். ராமானுஜர் வகுத்த பாஞ்ச ராத்திர முறைப்படி பூஜைகள் நடக்கின்றன.


ஆவணி மாதம் கோகுலாஷ்டமி விழாவில் வெகு விசேஷமாக, பிரமோற்சவம் மற்றும் பவித்ரோற்சவம், மாசிமக தீர்த்தவாரி, வைகுண்ட ஏகாதசி ஆகியனவும் இங்கே சிறப்பான விசேஷங்கள்.